Oh My கடவுளே



இருப்பதாக நினைத்து தான் 
இன்று வரை தேடுகிறோம்..
அடையாளம் ஏதுமில்லை 
அதனால் தான் வாடுகிறோம்..

ஆயிரங்கால் மண்டபத்தில் 
அமர்ந்திருப்பாயோ..
தேரோடும் வீதியெங்கும்
நிறைந்திருப்பாயோ..
மசூதிகளுக்குள் மறைந்திருப்பாயோ
தேவாலயத்தில் ஒளிந்திருப்பாயே..

நீ ஆசிரமத்தில் குடியேறியதாய் 
அலைகிறது ஒரு கூட்டம்..

வெள்ளி, செவ்வாய் மட்டும்
மஞ்சள் துணி சுற்றி
வேப்பமரத்தில் தேடுகிறது 
ஒரு கூட்டம்..

கண்ணுக்கு தெரியாததால் 
இல்லை என்று முடிவு செய்து 
கருப்பு சட்டை அணிகிறது 
ஒரு கூட்டம்..

சுருட்டு, சாராயம் வைத்து கெடா 
வெட்டுகிறது ஒரு கூட்டம்..

அக்காரவடிசல் வைத்து உச்சி 
கால பூசை வைக்கிறது 
ஒரு கூட்டம்..

பாத யாத்திரை போகிறது ஒரு கூட்டம்..
பனி மலையில் தேடுகிறது ஒரு கூட்டம்.
சிவபானம் புகைத்தால் தெளிவாய் 
தெரிவாய் என்கிறது ஓரு கூட்டம்..

குண்டலினி யோகம் செய்தால் 
உனை குறுக்குவழியில் சந்திக்கலாம் 
என்கிறது ஒரு கூட்டம்..

வென் பட்டு சாற்றினால் 
பளிச்சென்று தெரிவாய் 
என்கிறது ஓரு கூட்டம்..

நிர்வானம்தான் நிரந்தர வழி 
என்கிறது ஒரு கூட்டம்..

கோவணத்தோடு கும்பமேளாவிள்
தேடுகிறது ஒரு கூட்டம்..

அங்கவஸ்த்திரம் போட்டால் 
தான் அனுமதிக்கிறது 
ஒரு கூட்டம்..

நான் மேலடுக்கு சாதியில்லை
உனை கருவறையில் காண 
என் பரம்பரைக்கே உரிமையில்லை..

பொருளாதாரம் போதவில்லை 
தர்ம தரிசனம் என்பதால் 
தெளிவாக தெரிந்ததில்லை
உன் முகம்..

அடையாளம் தெரியாமல் 
தடுமாறி போகின்றோம் 
வாய்ப்பிருந்தால் ஒரு முறை 
நேரில் வரவும்..

கேட்பதற்கு என்னிடம் 
ஒரு கேள்வி தான் உள்ளது.

பேரண்டம், பெரு மலைகள், நீரருவி, 
நீல வாணம்,சுடும் நிலா, சூரியன் 
அனைத்தும் படைத்தது நீ என்றால்
வறுமையில் வற்றிய மார்பில் 
சுரக்காத பாலுக்கு ஏங்கும் அந்த 
குழந்தைக்கு பசியை கொடுத்ததும் 
நீயே தானா?

                                         

கருத்துரையிடுக

5 கருத்துகள்