குளம்

மழையே மறந்து போன எங்கள் ஊர் 
குளத்தில் மீன்களுக்கு பதிலாய் மண்புழுவை 
தேடுகின்றன கொக்குகள்.

கரையோரத்து புளியமரங்கள்
பூப்பதை நிறுத்தி பல வருடம் ஆகிறது.

விழுதுகளை தொலைத்த ஆலமரம் 
தன் வேர்களையும் தொலைத்து விடுமோ 
என்று கவலையில் இளைப்பாறுகிறார் 
மரத்தடி பிள்ளையார்..

புற்கள் இறந்து போன நடுக்குளத்தில் நித்தம் 
நடக்கிறது மட்டை பந்தும் வளைபந்தும்

அரசாங்க ஆதரவால் தற்காலிக 
"பார்" ஆனது எங்கள் படித்துறை

குளக்கரை இறக்கத்து பள்ளிக்கூட வாசலில்  
இலந்தவடை விற்கும் ஆயாவை தவிர 
தன் எல்லா அடையாளங்களையும் 
இழந்துவிட்டது எங்கள் ஊர் குளம்

பெரிதாக வருத்தங்கள் இல்லை
தண்ணீரை மறந்த குளத்தை 
தவறாமல் தூர்வாருகிறார்கள்
நூறு நாள் வேலை திட்டத்தில்

மண் சுமக்க வரும் சித்திகளுக்கும் 
அத்தைகளுக்கும் அன்றுபோலவே இன்றும் 
பேச கிடைத்துவிடுகிறது  யார் வீட்டு கதையோ

கருத்துரையிடுக

4 கருத்துகள்