Rain,
Ilayaraja music,
Books,
It's bliss...
மழைக்காலம் தொடங்கியதும் முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும் இது போன்ற பதிவுகளை நீங்கள் நிறையவே காண நேரிடும். மழை, இசை, கவிதை, காதல் இவற்றிற்குள் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்ற போதிலும் இவற்றை பிரித்துப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
எத்தனையோ கடினமான கணங்களில் கூட ஒரு நல்ல இசை நம் மனதை லேசாக்கிவிடுகிறது. ஒரு உன்னதமான கவிதையை படிக்க நேரிடும் போதெல்லாம் ஒரு முழு நாளுக்காண புத்துணர்ச்சி கிடைத்துவிடுகிறது. மழை காலங்களில் நாம் இயல்பை விட கொஞ்சம் மென்மையாகவே உணர்கிறோம். ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்புகள் அற்ற இவை அனைத்தும் காதலை பிரதானபடுத்துவது தான் ஆச்சரியம்.
பெரும்பாலும் கவிதை எழுத விரும்பும் அல்லது கவிதைகள் மேல் ஆசை கொள்ளும் எவருக்கும் அது காதலின் பொருட்டே அமைந்துவிடுகிறது. பெரும்பாலான நேரங்களில் காதலிகளை கவர்வதற்காகவே எழுதத் தொடங்குகிறோம் அதுவும் நாம் கவிதை எழுதுகிறோம் என்பதை நாம் விரும்பும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்தனம் செய்கிறோம். ஏதேதோ தலைப்புகளில் நாம் எழுதி திரிந்தாலும் மழைக் காலப் பொழுதுகளில் நாம் காதல் கவிதைகளையே பெரிதும் எழுத விரும்புகிறோம், காதல் கவிதைகளையே படிக்க நினைக்கிறோம், காதலின் நினைவுகளையே கொண்டாடவும் செய்கிறோம் காதலை தவிர்த்து மழை நமக்கு வேறு எந்த பாதிப்பையும் உணர்த்த மறுக்கிறது. குறுக்கீடுகள் அற்ற ஒரு மழைக்காலத்து தனிமை கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமாய் ஒரு கவிதை எழுதி விடுகிறேன் ஆச்சரியமாக அது ரசிக்கும் படியாகவும் அமைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் எழுத்துக்களை அல்ல, வாசிக்கும் நபர்கள் என் எழுத்துக்களை மறந்துவிட்டு மழையோடு சேர்ந்து தங்கள் காதலை ஒப்பிட்டுப் பார்க்கும் அந்த மனநிலையையே.
எப்போதெல்லாம் சாரல் மழை வீசுகிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல இசையை கேட்க விரும்புகிறோம், சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் கேட்கப்படும் போது அந்த இசையின் இனிமை அதிகரித்து விடுவதாகவே தோன்றுகிறது.
மின்னலே திரைப்படத்தில் மழையில் நனையும் ரீமாசென்னை டெலிபோன் பூத் வழியாக மாதவன் பார்க்கும்போது பின்னனியில் வரும் அந்த இசை நம்மை முழுவதுமாக நனைத்து விடுவதால் மாதவனை விடவும் அதிகமாக நாம் ரீமா சென்னை காதலிக்க தொடங்கி விடுகிறோம். உதாரணத்திற்கு இந்த ஒரு பாடலை கூறினாலும் நம் நினைவிற்கு எட்டிய எல்லா மழை பாடல்களிலும் சற்றேறக்குறைய இதே நிலைதான். உயிரே திரைப்படத்தில் தேனீர் கோப்பையுடன் ஓடும் ரயிலை பார்த்து கத்தும் ஷாருக்கான், குரு படத்தில் மழை பின்னணியில் சுதந்திரமாக ஆடும் ஐஸ்வர்யாராய், மௌன ராகத்தில் மழையில் அறிமுகமாகும் ரேவதி, ஈரம் படத்தில் மழை பின்னணியில் தெரியும் ஸ்ரீரங்கம் கோவில், சின்ன சின்ன மழை துளிகளில் நனையும் இஷா கோபிகர் இப்படி எத்தனையோ பாடல்களை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம் ஆனால் இதில் பிரதான படுவது மழையும் மழையின் பின்னனியில் வரும் இசையும் அதன் ஊடாக மறைந்திருக்கும் அந்த மெல்லிய காதல் மட்டுமே.
பாடல்கள் மட்டுமல்ல ஒரு நுட்பமான கவிதை, வரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதில் கடத்தப்படும் உணர்வுகள் உன்னதமாக அமைந்து விடும் போது மிக சட்டென்று நம்மை ஒரு காதல் மனநிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. கல்லூரியில் படிக்கும்போது தபு சங்கர் கவிதைகளுக்கு எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் அதுவும் ரசிகைகளின் கூட்டம் அதிகமாகவே இருக்கும் தபு சங்கர் கவிதை பிடிக்கும் என்பதைத் தாண்டி தபு சங்கர் கவிதைகள் படிப்பதால் அவனைப் பிடிக்கும் என்ற நிலை கூட இருந்திருக்கிறது. எதேச்சையாக என் வீட்டுக்கு வந்த என் தோழி ஒருவர் என் அலமாரியிலிருந்து புத்தகங்களுக்கு நடுவில் தபு சங்கரின் "தேவதைகளின் தேவதை" கவிதை தொகுப்பை மிகவும் ஆர்வமாக எடுத்து ஒரு சில பக்கங்களை புரட்டி விட்டு
"சான்சே இல்ல, அப்படியே ஒரு Breezy feeling என்று வியந்து பாராட்டினார்"
திருமணம், குழந்தைகள், வேலை என்று பல மாற்றங்கள் கண்ட பின்னும் பழைய நினைவுகளை, ஒரு மழை காலத்தை, சில்லிட வைக்கும் ஒரு சிலிர்ப்பை இந்தக் கவிதைகள் நிகழ்த்தி இருக்கிறது என்றால் அதனூடாக ஒளிந்திருப்பது காதலைத் தவிர வேறு என்னவாக இருந்திருக்க முடியும். இயற்கையாக பெய்யும் மழையும், யாரோ ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகளும், எப்போதோ கேட்ட ஒரு இசையும்,வேறு எதையும் நினைவு படுத்தாமல் காதலை மட்டுமே நினைவுபடுத்துவது தான் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு வினோதம்.
ஒரு டிசம்பர் மாத இரவில் அவளுக்கு உணவு வாங்கிச் சென்ற போது என்னை முற்றிலுமாய் நனைத்துவிட்ட அந்த பருவமழை, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதும் கேட்ட உடன் சட்டென்று எழுந்துவிட செய்யும் 'மன்னிப்பாயா' ரிங்டோன், முனை மடங்கி அட்டைகள் கசங்கி, பழுப்பேறிய பக்கங்களுடன் என் மேஜையில் கிடக்கும் சேத்தன் பகத்தின் அந்த 2 ஸ்டேட்ஸ் நாவல், தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆம்னி பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்று பாசமாய் கொடுத்துவிட்டு சென்ற ரேமண்ட் ஷர்ட் இப்படி மீளுருவாக்கம் செய்ய முடியாத இன்னும் எத்தனையோ தருணங்களை, என்றைக்காவது பெய்யும் ஒரு பருவ மழையோ , ஆனந்த விகடனில் காண கிடைக்கும் ஒரு கவிதையோ, பண்பலையில் ஒலிக்கும் ஒரு பாடலோ மீண்டும் உயிர்பித்துவிடும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். இதை எழுதி முடித்துவிட்டு மொபைல் ப்ளே லிஸ்டில் ப்ளே பட்டனை அழுத்தியதும் விட்ட இடத்தில் இருந்து மிக மென்மையாக ஒலிக்க தொடங்குகிறது
முன் பனியா
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே..

3 கருத்துகள்
சிறப்பு 👌👌👌👌
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்கு