ஆதி மனிதன் தோன்றி சுமார் 24 லட்சம் ஆண்டுகள் ஆகிறது என ஆய்வுகள் கூறுகிறது அப்படி என்றால் காதலுக்கும் அதே வயதை நாம் பொருத்திக் கொள்ளலாமா என்றால் அதற்கு சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆதாமை தவிர ஆண்கள் எவரும் இல்லை என்ற நிலையில் ஏவாளுக்கு ஏற்பட்டது காதல் என்று எப்படி சொல்வது, அது ஒரு நிர்பந்தம். மனிதர்களோடு காதலும் பரிணாம வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் ஏவாள் ஆதாமை புறக்கணிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண் தனக்கான ஆடவனை தெரிவு செய்வதற்கு பெரும் பிரயத்தனங்கள் செய்வதில்லை, அவன் மனதளவில் முட்டாளாக இருக்கிறானா என்பதை மட்டுமே உறுதி செய்துகொள்கின்றாள்.
ஆம் நண்பர்களே முட்டாள்தனம் தான் காதலின் ஆகச்சிறந்த திறவுகோல்.நம் மூளைக்கு சற்று ஓய்வளித்துவிட்டு இதயத்தை மட்டுமே கேட்டு நடப்போமேயென்றால் நாம் காதல் பயணங்கள் சுவாரஸ்யமான பாதையில் செல்கிறது என்றே அர்த்தம். என் காதலி ஒருவருக்கு காஃபி பிடிக்காது அவள் மேல் உள்ள பாசத்தில் எனக்கு மிகவும் பிடித்த காஃபியை நான் இன்று வரை தொடுவதேயில்லை. இது அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் இந்த அர்த்தமற்ற செயல்தான் என் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
ஒரு நாள் பஸ்ஸில் இருப்பதாக மெஸேஜ் வந்துச்சு, நான் வண்டியை எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போறதுக்குள் பஸ் எடுத்துடுச்சு. என் வண்டில அறுபதுல போனாலே பிரேக் பிடிக்காது அந்த வண்டில என்பதுல போய் சாஸ்திராவை தாண்டுவதற்குள் பஸ்ஸை சேஸ் பண்ணி நடு ரோட்டில் வண்டியை ஓட்டிக்கிட்டு பின்னாடி திரும்பி பார்த்தா ட்ரைவர், பஸ்சுக்கே கேட்கிற மாதிரி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறார் அதனால என்ன முதல் சீட்டுல இருந்த என் ஆளு என்னை பார்த்திருச்சு அது போதும். இந்த செயலை முட்டாள்தனம் என நீங்கள் முடிவு செய்தால் அது உங்கள் அறியாமையே. பெரும்பாலும் முட்டாளாக இருப்பதே காதலில் மிகவும் கொண்டாடப்படுகிறது. நம் அறியாமை ரசிக்கப்படுவது காதலில் மட்டுமே. நமக்கு முன்னாள் உள்ள தலைமுறையில் கூட இதே நிலை தான் எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன்
"எங்க பிரகாஷ் அப்பாவுக்கு இன்னும் பேண்டுக்கு மேட்சாக சட்டை போட தெரியாது, கருப்பு பேண்ட்டுக்கு பொடி கலர்ல சட்டை போடுவார் ஒவ்வொரு தடவையும் நான் சொல்லி தான் மாத்துவாரு"
இதில் பிரதானப்படுவது அந்த ஆண்ட்டியின் மேதமையோ அல்லது அந்த அங்கிளின் அறியாமையோ அல்ல அதனூடாக படரும் மெல்லிய காதலே.
எத்தனையோ தருணங்களில் வாட்ச் சரியாக கட்டாததற்கும், பழைய பெல்ட் அணிந்ததற்கும், லேவண்டர் சட்டைக்கு சந்தன கலர் பேண்ட் போட்டதற்கும், நகம் வெட்டாததற்கும், க்ளீன் ஷேவ் செய்யாததற்கும் என் காதலிகளால் திருத்தபட்டிருக்கிறேன். இங்கே என் அறியாமையை விட அவர்களின் அக்கறையே கவனிக்கபடுகிறது. என்னை திருத்தம் செய்யும் போது அவர்கள் அடையும் பேரிண்பம் அவர்களுக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நான் நிரந்தர முட்டாளாகவே என்னை அடையாளப்படுத்தி கொள்கிறேன். நாம் ரசிக்கப்படுகிறோம் என்பதை விட வேறு எந்த உணர்வு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கப்போகிறது.
வல்லம் பஸ் ஸ்டான்ட்ல நின்று கொண்டிருந்த போது நிறுத்துவது போல் வந்து கடந்து சென்ற திருச்சி பஸ்ஸின் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த அந்த வெளிர் நீல சுடிதார் பெண்ணின் ஸ்னேக பார்வைக்காக ஓடி சென்று அந்த பேருந்தில் ஏற முற்பட்டேன் ஆனால் வேகமாக ஓடியும் ஏற முடியாமல் எதிரில் வந்தவர் மேல் மோதி தடுமாறி நின்ற போது வந்த ஏமாற்றம் அந்தப் பெண் திரும்பிப் பார்த்தபோது தொலைந்தே போனது. நான் ஏறி விடமாட்டேனா என்ற எதிர்பார்ப்பு என்னை விட அந்த பெண்ணிற்கே அதிகம் இருந்திருக்கும். அதற்கு நிச்சயமாக என் புறத்தோற்றம் காரணம் அல்ல, சொற்ப வினாடிகளிலேயே நம்மால் வசீகரிக்கப்பட்டு சூழ்நிலையை பொருட்படுத்தாமல், முடியாது என தெரிந்தும் நமக்காக முயற்சி செய்கிறானே என்ற அந்த பெண்ணின் உள்ளுணர்வே காரணம், ஆம் நண்பர்களே இதயப்பூர்வமான நம் முட்டாள்தனங்கள் எப்போதும் ரசிக்கப்படுகின்றன. நாம் ரசிக்க படுவதே காதலின் படிநிலைதான் மிகச்சில சூழலில் இந்த ரசிப்பு தீர்க்கமான காதலாய் முடியவும் சாத்தியங்கள் உள்ளன.
ஒரு முடிவற்ற முட்டாள்தனங்களின் குவியலாகவே காதல் இருந்து வந்துள்ளது ஆனாலும் அதில் தவறுகள் எதுவும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. கடந்த இரண்டு தசாப்தங்களாக காதலின் பரிணாம வளர்ச்சியின் விகிதம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. முட்டாள்தனங்கள் நிறைந்த காதல் மெல்ல மெல்ல மறைய தொடங்கி விட்டது இப்போதெல்லாம் இதயங்களை விட மூளையையே அதிகம் பயன்படுத்துகிறோம், தேவைகளை பொருத்தே நம் காதலை தீர்மானிக்கிறோம். இயல்பான காதல் என்பது சற்றேறக்குறைய தொலைந்து போய்விட்டது என்றே சொல்லலாம். ஏதோ ஒன்றிற்காக ஆசைப்படுகிறோம், ஏதோ ஒரு கவர்ச்சியில் மயங்கி விடுகிறோம் ஆனால் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு அந்த காதலை புறக்கணித்து விடுகிறோம். நாம் காதலிப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் நம் கண்முன்னே அடித்து நொறுக்கி விடுகிறோம். காதல் அதன் நிரந்தரத் தன்மையை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒரு வரைமுறை இல்லாமல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் காதலை வெகு வேகமாக கிரகித்து விடுகிறோம் ஆனால் அதைவிட வேகமாக நிராகரித்தும் விடுகிறோம் சுருக்கமாக சொன்னால் பிரேக்கப் தேதியை முடிவு செய்த பின்னரே இங்கே காதலிக்க தொடங்குகிறோம். காதல் திருமணங்கள் செய்தவர்கள் கூட இப்போது காதலிக்க மறுக்கின்றார்கள் காரணம் காதலிக்கும்போது இருந்த முட்டாள்தனத்தை தொலைத்து விட்டார்கள், காதலிக்கும் போது இருந்த அந்த அறியாமை அவர்களிடமிருந்து விலகி விட்டது, நாம் ரசிக்கபடுகிறோம் என்ற உணர்வு மேலோங்கி இருந்த காலங்கள் எல்லாம் மங்கிப் போய்விட்டது இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அவர்களுக்கெல்லாம் இப்போது
"காதலிக்க நேரமில்லை"

1 கருத்துகள்
🥰😍🥰
பதிலளிநீக்கு