தலைப்பை பார்த்துவிட்டு படிக்க வந்த அனைத்து காதல் நெஞ்சங்களுக்கும் நன்றிகள். "காதல்" உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டது அதை வெளிப்படுத்த மொழியோ, வார்த்தைகளோ தேவை இல்லை என்பதே நிதர்சனம் இருந்தாலும் மீளமுடியாத சினிமா பாதிப்பின் காரணத்தால் இன்றும் நாம் காதலை சொல்ல விதவிதமாய் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
அலைபாயுதே திரைப்படத்தில் ஓடும் ரயிலில் ரெக்கார்டு நோட்டை வாங்கியபடி
"ஷக்தி நீ அழகா இருக்கன்னு நினைக்கல நா உன்ன விரும்பல ஆனா இதுலாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு" என்று மிகவும் ரொமான்டிக்காக காதலை வெளிப்படுத்துவது மாதவனுக்கு சத்தியமாய் இருந்திருக்கலாம் ஆனால், காதல் கெட்ட வார்த்தை இல்லை என தெளிய தொடங்கிய காலத்தில் பிறந்த எங்களுக்கு அது இறுதிவரை சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வந்தது. எங்கள் வளரிளம் பருவம் தொடங்கி இன்றுவரை காதலை ஒரு பயத்தோடுதான் அனுகிவந்துள்ளோம்.
காதலிப்பதும் காதலை வெளிப்படுத்துவதும் வரையறுக்க முடியாத ஒரு செயலாகும். அது, ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு சீண்டல், ஒரு தீண்டல், ஒரு உதவி, ஒரு வார்த்தை, என ஏதோ ஒன்றின் பொருட்டு ஒரு பரிசுத்த வினாடியில் பட்டென்று நிகழ்ந்துவிடும் வேதியல் வினை. ஆனால் இவையாவும் இல்லாமலும் கூட ஒரு காதல் நிகழ்வதற்கான சாத்தியம் உண்டு. சர்க்கரை ஆலையில் வேலை பார்த்துட்டு இருந்த எங்கள் பக்கத்து வீட்டு அண்ணன் அடுத்த பில்டிங்கில் தங்கியிருந்த ஒரு அக்காவை லவ் பண்ணினார். ஆனால் அதை அவர் வாயை திறந்து ஒரு நாள் கூட சொன்னது இல்லை, அதிகப்படியாக அவர் செய்ததெல்லாம் அந்த அக்கா போகும்போது ஸ்கூல் வரைக்கும் பின்னாடி சைக்கிள்ல போவது சாயந்தரம் திரும்பி வரும்போது வீடு வரை பின்னால் வருவது மட்டுமே. எனக்கு தெரிந்து அந்த அண்ணன் சைக்கிளை நிறுத்தி வழியில் நின்று அந்த அக்காவிடம் பேசியது கூட இல்லை. ஒரு லவ் லெட்டர் எழுதி சின்ன பசங்க மூலம் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றதே இல்லை. ஆனால் கடைசி வரைக்கும் நாள் தவறாமல் அக்காவை ஸ்கூல் வரை கூட்டிட்டு வருவாரு, அந்த அக்கா கோயிலுக்கு போனா பத்தடி தள்ளி பின்னாடி நின்னு பார்த்துகிட்டே இருப்பார். அந்த அக்கா அவங்க அம்மாவோட சந்தைக்கு போகும் போது இவரும் ஒரு ஒயர் கூடையை எடுத்துகிட்டு பின்னாடியே போவார். அவர் அந்த அக்காவிடம் ஒரு வார்த்தை கூட பேசி நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்க அம்மா பக்கத்து வீட்டுக்காரங்க கூட பேசிட்டு இருந்த வார்த்தைகளை இன்னும் என்னால் நம்ப முடியல "அந்த கார்த்தி பய இந்த அரிசி கடைக்காரர் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டானாம்" அந்த அண்ணன் ஓடி போனது எனக்கு ஆச்சரியம் இல்லை ஏன்னா அவர் திட்டமே அதுதான். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாத அந்த அண்ணன எப்படி அந்த அக்கா காதலிச்சாங்க, அவ்வளவு தீர்க்கமாக எப்படி நம்புனாங்கன்னு இன்னும் தெரியல. எதுவும் சொல்லாமல் கூட காதலிக்க முடியும்னு புரிய வச்சது கார்த்தி அண்ணன் தான். என் கிளாஸ்மேட் ஒரு பையன் ரெண்டு வருஷமா ஒரு பொண்ணு பின்னாடியே சுத்திகிட்டு இருந்தான், அது ஒரு பெரிய பிரச்சினை இல்ல அந்த டைமில் நாங்க எல்லாரும் கிட்டத்தட்ட அதே வேலையை தான் பார்த்திட்டு இருந்தோம். மூணாவது வருஷம் முடியும்போது ஒருவழியா லெட்டர் கொடுத்துடலாம்னு முடிவு பண்ணினான். ஆனால் அதை இங்கிலீஷ்ல எழுதபோறேன்னு சொன்னத எங்களால் ஏத்துக்கவே முடியலை ஏன்னா அவனால் தப்பில்லாமல் அதிகபட்சமா ரெண்டு வரி கூட இங்கிலீஷ்ல எழுத முடியாது. இருந்தாலும் இங்கிலீஷ்ல லவ் லெட்டர் எழுதி அந்த பொண்ணு கிட்ட கொடுத்துட்டான், அதுல என்ன புரிஞ்சதுன்னு தெரியல அந்த பொண்ணு அந்த லெட்டரிலேயே பதில் எழுதி கொடுத்துடுச்சு. அந்த லெட்டரை எங்கள் இங்கிலீஷ் வாத்தியார் பார்த்திருந்தா அந்த இடத்திலேயே தூக்கு போட்டு செத்திருப்பாரு. அவன் எழுதின லெட்டர்ல 5 வரியில நாலுவரி மிஸ்டேக் கடைசி வரி மட்டும் தான் கரெக்ட். அந்த கடைசி வரி " I Love You" இது நாங்க எதிர்பார்த்தது தான். அந்த பொண்ணு பதிலுக்கு "Me to" என்று எழுதி இருந்துச்சு பாருங்க, அப்ப நான் ரெண்டு விஷயத்தை முடிவு பண்ணினேன் முதல் விஷயம் இவங்க ரெண்டு பேரும் உண்மையாவே "Made for each other" இவங்களுக்கு எந்த பொருத்தம் இருக்கோ இல்லையோ ஆங்கில பொருத்தம் அமோகமா இருக்கு, இரண்டாவது விஷயம் காதலுக்கு "மொழி" முக்கியமில்லை. போன மாசம் அதே நண்பன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பேசினான் "மச்சான் என் பொன்னு செகண்ட் ஸ்டேன்டர்ட் படிக்கிறா, இங்க கத்தார்ல ஓரு இன்டர்நேஷனல் ஸ்கூல் மச்சான் வீட்டில கூட இங்கிலீஷ்ல தான் பேசும்" என்று அவன் சொன்ன போது "நீ எப்படிடா பதில் சொல்லுவ" என்று கேள்வி தொண்டை வரை வந்தும் நிறுத்திக்கொன்டேன். இந்த சம்பவங்கள் உணர்த்துவது ஒன்றை மட்டுமே வார்த்தைகளோ , மொழிகளோ காதலுக்கு தேவையில்லை ஒரு வரையறுக்க முடியாத ஈர்ப்பு சரியான அளவில் பொருத்தமான நபர்களிடம் கிடைக்கப்பெறும் அந்த அபூர்வ நொடிகளில் காதல் சட்டென்று பூத்து விடுகிறது. ஆனாலும் போன நூற்றாண்டின் இறுதியில் பிறந்த எங்களுக்கு காதலை வெளிப்படுத்துவது மிகவும் போராட்டமாகவே இருந்தது. கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்தே காதலிக்க தொடங்கி (அந்த பொண்ணுக்கே தெரியாமல்) மூன்று ஆண்டுகள் போராடி கடைசியில் அந்த பெண் நம்பரை வாங்கி போன் பண்ணலாம் என முடிவு செய்தபோது அந்த பெண்ணிற்கு கல்யாணம் முடிவாகிவிட்டது. அந்த காவிய காதலின்(?) காயங்கள் வேலைக்கு சேர்ந்ததும் ஆற தொடங்கியது. வேலைக்கு சேர்ந்த பின் இந்த காதலை வெளிப்படுத்துவது கொஞ்சம் எளிதாக தெரிந்தாலும் அவ்வளவு இயல்பாக சொல்லி விட முடியவில்லை. பிரேமம் படத்தில் ஒரு காட்சி வரும், அந்த ஹீரோ நிவின் பாலி முதல் பெண்ணிடம் காதலை சொல்ல பெரும் பிரயத்தனம் செய்திருப்பார், இரண்டாவது முறை அந்த அளவிற்கு கஷ்டம் இல்லை இருந்தாலும் வெளிபடுத்த கொஞ்சம் அவகாசம் எடுத்து சொல்லியிருப்பார். ஆனால் அந்த மூண்றாவது பெண்ணை பார்த்த இரண்டாவது சந்திப்பில் வெளிபடுத்திவிடுவார். காரணம் அப்போது அவர் நிராகரிக்க முடியாத ஒரு நிலையில் இருப்பார். எங்கள் தலைமுறையின் சாபக்கேடு இதுதான் எங்கே நாம் நிராகரிக்க பட்டுவிடுவோமோ, வீட்டில் சம்மதிக்க மறுத்துவிடுவார்களோ, அந்த பெண்ணிற்கு பொருத்தமான அழகில் நாம் இல்லையோ ,நாம் புறக்கணிக்க பட்டுவிடுவோமோ என்கிற தயக்கத்திலேயே எங்கள் காதலை இழந்துவிட்டோம். பிரேமம் படத்தில் வருவது போல் ஓரு நிராகரிக்க முடியாத சமூக நிலையை எட்டிவிட்டு காதலை வெளிப்படுத்த நினைக்கும் போது என் காதலியின் முதல் குழந்தை ப்ளே ஸ்கூல் முடித்துவிட்டு கின்டர் கார்டனில் சேர்ந்து விடுகிறது. என் நேசத்திற்குரிய காதலிகளே இந்த தயக்கங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை , என்னளவில் இது நான் தப்பவிட்ட தருணங்கள் ,சொல்ல மறந்த கதை. ஏற்க்கும் சூழலில் நீங்கள் இல்லை என்பது நன்றாக தெரியும் இருந்தாலும் சொல்கிறேன்
"I Love You "

5 கருத்துகள்
❤️💔❤️🩹
பதிலளிநீக்குநன்றி மச்சி
நீக்கு💔💔💔
பதிலளிநீக்குநன்றி
நீக்கு❤️
பதிலளிநீக்கு