பொருள்வயிற் பிரிதல் - தலைவி கூற்று



அன்பு கணவா...

வழக்கம்போல் காத்திருக்கிறேன் 
உன் அலைபேசி அழைப்பிற்க்காய்
இன்றேனும் அறிவாயா இந்த 
கம்பியில்லா சாதனத்தில் நம் 
காதலை கடத்துவது கஷ்டமென்று

தூர தேசத்திலிருந்து நீ தரும் 
முத்தமெல்லாம் மின்காந்த அலைகளிள் 
ஊடுருவி உயிரற்ற சத்தமாகவே ஒலிக்கிறது.

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட 
கடல் கடந்து சென்றாயே, என் மூலதனம் 
நீதான் என்பதை எப்படி மறந்தாய்?

சரியும் உன் பொருளாதாரத்தை சரி செய்ய 
என் இளமையை அடகு வைத்தது சரிதானா?

காதோரம் முத்தம் தருவாய்,
கூட்டத்தில் கண்ணடிப்பாய், 
குறும்பாக இடை தொடுவாய்,
காதல் படம் கூட்டி செல்வாய் 
இந்த என் சின்ன ஆசைகளை 
சீரழித்து விட்டது டாலர்கள் 
மீதான உன் பேராசை..

என் கற்பனையின் கழுத்துகள் 
என் கண் முன்னே நெறிக்கப்பட்டன..
முறிந்த சிறகுகளை கொண்டு 
எப்படி பறப்பது காதல் வானில்?

இதயங்கள் இனைந்தாலும் 
இதுவும் ஒரு 'கைக்கிளை'தான்..
விடுமுறையில் கூடுவதால் 
பொருத்தமான 'பெருந்தினை'தான்..

ஆடி மாத திருவிழா போல் ஆண்டுக்கு 
ஒருமுறை வந்து அவசரமாய் 
அரங்கேற்றி செல்கிறாய் ஒரு 'கலவி'யை
என் அன்பு கணவா எப்போதுதான்  
நீ உணர்வாய்??  கட்டிலை தான்டி 
மிச்சமிருக்கும் ஒரு "வாழ்க்கையை"

கருத்துரையிடுக

2 கருத்துகள்